Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் அரசு மாதிரிப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 'அடல் டிங்கரிங்' ஆய்வகத்தை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ். உடன் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உள்ளிட்டோர்.

காஞ்சிபுரம்

பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்று பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ‘அடல் டிங்கரிங்ஆய்வகம்' தொடக்க விழா நடைபெற்றது. அடல் டிங்கரிங் ஆய்வகம் என்பது, மாணவர்களின் அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதற்கான நவீனஉபகரணங்களுடன் கூடிய ஆய்வகம் ஆகும். இந்த ஆய்வகத்தை தொடங்கி வைத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியது:

இந்த அரசுப் பள்ளியில் 900 ஆக இருந்த மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது. அண்ணா பிறந்த மண்ணில் அரசுப் பள்ளியின் வளர்ச்சி மகிழ்ச்சிக்குரியது. அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர முன்னுரிமை அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரும் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆன்-லைன் வகுப்புகள் பல பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. இது நேரடி வகுப்புக்கு நிகராக வர முடியாது. ஆசிரியர்கள் மாணவர்களை அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.

பள்ளி மாணவிகளுக்கு சில பிரச்சினைகள் வருகின்றன. பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. பெண்கள் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும். அதற்கு தனியார் தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி போன்றவற்றைக் கூட பயன்படுத்தலாம்.

ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களும் ஆசிரியர்களை தங்களது மற்றொரு பெற்றோராக பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் கண்டிப்பது நமது நலனுக்குத்தான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஒரு பள்ளியின் ஆசிரியர் மாணவியிடம் பாலியல் செயலில் ஈடுபட்டார் என்பதால் ஆசிரியர்கள் அனைவரையும் குறைகூற முடியாது. தனியார்பள்ளிகளில் மாணவிகள் இதுபோன்ற பாலியல் புகார் கூறினால், அதை உடனடியாக துறையின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று அதை மறைக்க முயலக் கூடாது. ‘மாணவிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் பள்ளி வெளிப்படையாக நடவடிக்கை எடுக்கிறது' என்று பள்ளியின் மீது பெற்றோருக்கு நம்பிக்கை அதிகரிக்குமே தவிர நற்பெயருக்கு களங்கம் ஏற்படாது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், தொடக்கப் பள்ளி இயக்குநர் அறிவொளி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஆ.மனோகரன், முதன்மை கல்வி அலுவலர் ரெ.திருவளர்ச்செல்வம், மாவட்ட கல்வி அலுவலர் பு.நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x