Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

சமூக வலைதளங்களில் செய்தி பரவியதால் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக அனுரத்னா மீண்டும் நியமனம்: சுகாதாரத் துறை அமைச்சர் விசாரணை நடத்தி நடவடிக்கை

தலைமை மருத்துவர் பதவி பறிக்கப்பட்ட மருத்துவர் அனுரத்னாவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவுக் குரல் எழுந்த நிலையில், பொன்னேரி அரசு மருத்துவமனையில் நேற்று விசாரணை நடத்தினார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் குருநாதன், கூடுதல் இயக்குநர் அசோக்குமார் உள்ளிட்டோர்.

பொன்னேரி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக (பொறுப்பு) கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தவர் அனுரத்னா.

இவர், தலைமை மருத்துவர்பொறுப்புக்கு வந்த பிறகு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இதனால், பொன்னேரி சுற்று வட்டார மக்களின் அன்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில்,நவீன மருத்துவ உபகரணங்களை கையாள்வது தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அந்த பயிற்சி காலங்களில், பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை (பொறுப்பு) மருத்துவராக விஜய் ஆனந்த் நியமிக்கப்பட்டார்.

மருத்துவர் அனுரத்னா பயிற்சிமுடிந்து கடந்த 13-ம் தேதி மீண்டும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார்.

ஆனால், அவர் ஏற்கெனவே இருந்த பதவியை தொடர விடாமல், அவரை விட பணியில் 5 ஆண்டுகள் ஜூனியரான விஜய் ஆனந்த் அப்பணியை தொடர்ந்து மேற்கொள்ளட்டும் என, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் சாந்தி கூறியுள்ளார்.

சாந்தியிடம் அனுரத்னா பல்வேறு தருணங்களில் எதிர் கேள்வி கேட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் மருத்துவர் அனுரத்னாவுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டனர். அது வைரலாக பரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றது.

அதன் விளைவாக நேற்றுபொன்னேரி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் விசாரணை நடத்தினார். மருத்துவர்கள் அனுரத்னா, விஜய் ஆனந்த்,இணை இயக்குநர் சாந்தி உள்ளிட்டோரிடம் நடந்த அந்த விசாரணையின் முடிவில், அனுரத்னாவை மீண்டும் பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக பணியில் அமர்த்த அமைச்சர் உத்தரவிட்டார்.

சுகாதாரத் துறை அமைச்சரின் இந்த விசாரணையின் போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் குருநாதன், கூடுதல் இயக்குநர் அசோக்குமார், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகர், டி.ஜெ.கோவிந்தராசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும், மருத்துவர் அனுரத்னாவுக்கு ஆதரவாக பொன்னேரியில் நேற்று 'அறம்' திரைப்பட இயக்குநர் கோபி நயினார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x