

தூத்துக்குடி- திருநெல்வேலி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலான பேருந்துகள் இடைநில்லா பேருந்துகளாகவே இயக்கப்படுகின்றன. ஒருசில பேருந்துகள் மட்டுமே சாதாரண பேருந்துகளாக இயங்குகின்றன. அந்த பேருந்துகளும் முறையாக அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களில் நிற்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் தடம் எண் 150 சாதாரண பேருந்தில் நேற்றுமுன்தினம் மதியம் கல்லூரிஉதவி பேராசிரியர் ஒருவர் வசவப்பபுரத்துக்கு ரூ.25 டிக்கெட் எடுத்துபயணித்துள்ளார். வசவப்பபுரம் பேருந்து நிறுத்தம் வந்தவுடன் உதவி பேராசிரியர் எழுந்து இறங்கமுற்பட்டுள்ளார். ஆனால், பேருந்து ஓட்டுநர் மற்றொரு பேருந்தை வேகமாக முந்திச் செல்வதில் குறியாக இருந்ததால் அங்கு நிறுத்தவில்லை. நடத்துநரிடம் விசில் அடிக்குமாறு உதவி பேராசிரியர் கூறியிருக்கிறார். அதற்கு அவர் “ஓட்டுநரிடம் சென்றுகூறுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உதவி பேராசிரியர் ஓட்டுநரிடம் சென்று கூறியுள்ளார். அதற்குள் பேருந்து சுமார்3 கி.மீ., தொலைவை கடந்து சென்றுவிட்டது. அப்போதும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவில்லை. மாறாக “மெதுவாக செல்கிறேன், இறங்கிக் கொள்ளுங்கள்” என அலட்சியமாக கூறியுள்ளார். இதையடுத்து நடுவழியில் உதவிப் பேராசிரியர் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து இறங்கியுள்ளார்.
கீழே இறங்கியதும் வேகமாக சென்ற அந்த அரசு பேருந்தை தனது செல்போனில் படம் எடுத்து, அதனுடன் தான் எடுத்த டிக்கெட்டையும் சேர்த்து அரசு போக்குவரத்து கழகத்தின் வாட்ஸ்அப் புகார் எண்ணில் புகார் தெரிவித்துள்ளார். வணிக மேலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது. சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் முறையாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் உதவி பேராசிரியரை தொடர்புகொண்டு, இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.