

சட்டப்பேரவை தேர்தலை முன் னிட்டு தமிழகத்தில் உள்ள 17,350 ரவுடிகளை வெளியேற்றுவது குறித்து டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. தேர்தலை வன்முறை இல்லாமல் அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள ரவுடிகளை ஊரை விட்டு வெளியேற்ற முடியுமா என்பது குறித்து முடிவு எடுக்க, தமிழக டிஜிபி கே.அசோக்குமாருக்கு தேர்தல் ஆணையம் ஒரு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது எடுக்கப்பட்ட ரவுடிகள் பட்டியலில் 16,500 பேர் இடம் பெற்றிருந்தனர். இதில் தற்போது 20 சதவீதம் ரவுடிகள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்ச மாக, சென்னை மாவட்டத்தில் 3,500 ரவுடிகளும் குறைந்த பட்சமாக திருவள்ளூர் மாவட் டத்தில் 345 ரவுடிகளும் பட்டியலில் உள்ளனர். இதேபோல நெல்லை மற்றும் புறநகர் பகுதியில் 1,980, மதுரை மாவட்டத்தில் 1,300, கன்னியாகுமரி - 748, கோவை - 815, சேலம், திருச்சி - தலா 700, காஞ்சிபுரம் - 416, விழுப்புரம் - 475, விருதுநகர் - 655, தூத்துக்குடி - 605 பேர் உட்பட மொத்தம் 17,350 ரவுடி கள் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.
பட்டியலில் உள்ளவர்களை தேர்தல் நேரத்தில் சொந்த ஊரை விட்டு வெளியேற்றுவது குறித்து முடிவு செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதில், ரவுடிகள் அனைவரையும் சொந்த ஊரில் இருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து பட்டி யலில் உள்ள அனைத்து ரவுடிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குறிப் பிட்ட நாட்களுக்குள் நீங்களே சொந்த ஊரில் இருந்து வெளியேறவில்லை என்றால் கைது அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.