Published : 23 Nov 2021 06:02 PM
Last Updated : 23 Nov 2021 06:02 PM

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் வெள்ள சேத பாதிப்புகள்: மத்தியக் குழுவினர் ஆய்வு

பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையில் இருந்தபடி ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினர்.

வேலூர்/ராணிப்பேட்டை

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையை மத்தியக் குழுவினரிடம் வேளாண் அதிகாரிகள் சமர்ப்பித்தனர்.

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பதிவானது. கடந்த ஒரு வாரமாகப் பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. தமிழகத்தில் மழை சேத பாதிப்புகளை மத்தியக் குழுவினர் இன்று (நவ.23) நேரில் ஆய்வு செய்தனர்.

குகையநல்லூர் கிராமத்தில் விவசாயி ஒருவரிடம் பயிர் சேதம் குறித்த விசாரித்த மத்தியக் குழுவினர்.

மத்திய நிதியமைச்சக செலவினங்கள் பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையில் மத்திய நீர்வள அமைச்சக இயக்குநர் தங்கமணி, எரிசக்தித் துறை உதவி இயக்குநர் பவ்யா பாண்டே கொண்ட குழுவினருடன் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை இயக்குநர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

காட்பாடியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் வெள்ள சேத பாதிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்ட வெள்ள சேத பாதிப்புகள் அடங்கிய புகைப்படங்களை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்களை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விளக்கினார்.

மத்தியக் குழுவினரிடம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் பயிர் சேத விவரங்கள் குறித்த அறிக்கையை 4 மாவட்ட வேளாண் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். தொடர்ந்து, காட்பாடி தாலுக்காவுக்கு உட்பட்ட குகையநல்லூரில் வெள்ளத்தால் நெற்பயிர்கள் சேதமடைந்தது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் மத்தியக் குழுவினர் கேட்டறிந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகள் குறித்த புகைப்படங்களைப் பார்வையிட்ட மத்தியக் குழுவினர்.

மேல்பாடி-பொன்னை இடையிலான சேதமடைந்த தரைப்பாலம், பொன்னை ஆற்றின் குறுக்கே 1857ஆம் ஆண்டு கட்டப்பட்ட அணை மற்றும் சேதமடைந்த பொன்னை தரைப்பாலத்தையும் மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) கதிர் ஆனந்த் (வேலூர்), ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர், மத்தியக் குழுவினரின் ஆய்வு தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சேத விவரங்களை முழுமையாகத் தெரிவித்து நிவாரணம் கோரலாம் என மத்தியக் குழுவினர் தெரிவித்தனர். மாவட்டத்தில் சேத விவரங்கள் தொடர்ந்து கணக்கிட வேண்டியுள்ளது. எந்த ஒரு தனி நபர், விவசாயியாக இருந்தாலும் பாதிப்புகள் முழுமையாகக் கணக்கிடப்படும். யாரையும் விட்டுவிட மாட்டோம்’’ என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை பெல் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெள்ள சேத பாதிப்புகள் குறித்துப் புகைப்படக் கண்காட்சியை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். அவர்களிடம் பாதிப்புகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விளக்கினார். பின்னர், மேலப்புலம் புதூர் கிராமத்தில் நெற்பயிர் சேத விவரங்களையும் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x