

திண்டுக்கல் அருகே மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த தனியார் கல்லூரி தாளாளர், போளூர் நீதிமன்றத்தில் இன்று (23-ம் தேதி) சரணடைந்தார்.
திண்டுக்கல் அடுத்த முத்தனம்பட்டி கிராமத்தில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு, கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதற்கு விடுதிக் காப்பாளர் அர்ச்சனா துணை போனதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, திண்டுக்கல் – பழநி சாலையில் மாணவிகள் கடந்த 19-ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, தாளாளரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விடுதிக் காப்பாளர் அர்ச்சனாவைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தாளாளர் ஜோதிமுருகனைத் தேடி வந்தனர். கல்லூரி மற்றும் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், போளூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், திண்டுக்கல் ரிங் ரோடு, நாராயணதாஸ் நகரில் வசிக்கும் பழனிசாமி மகனும், தனியார் கல்லூரி தாளாளருமான ஜோதிமுருகன் (45) இன்று (23-ம் தேதி) சரணடைந்தார். அவரை 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் வெங்கடேசன் உத்தரவிட்டார். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் ஜோதிமுருகன் அடைக்கப்பட்டார்.
சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகரான இவர், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.