

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த கனமழையும் பெய்தது. இதனால் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், குமராட்சி, பண்ருட்டி, விருத்தாச்சலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன. இந்த மழையால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. சுமார் 2 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன.
இந்த நிலையில் கெடிலம் ஆறு, தென் பெண்ணை ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால் கடலூரில் சுமார் 50 கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. கடலூர் நகரத்தையொட்டியுள்ள குறிஞ்சி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகர்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த பொதுமக்களைப் படகு மூலம் மீட்டு, முகாம்களில் தங்கவைத்து உணவு வழங்கியது.
இந்த நிலையில் இன்று (நவ.23) காலை மத்திய அரசின் உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் மத்தியக் குழுவினர் கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள், விளைநிலங்கள், சாலைகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பாதிப்பு விவரங்களைக் கேட்டறிந்தனர். தமிழக அரசின் வருவாய்த் துறை ஆணையர் பணீந்திரரெட்டி, கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், கடலூர் எம்எல்ஏ கோ.ஐயப்பன் மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
அதே பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினையும் மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து அக்குழுவினர் பரங்கிப்பேட்டை ஒன்றியம் பூவாலை கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களைப் பார்வையிட்டனர். விவசாயிகளிடம் வெள்ள பாதிப்புகள் பற்றிக் கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.