ஆம்புலன்ஸ் தாமதமானதால் உயிரிழந்த லாரி கிளீனர்: கரூரில் டேங்கர் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் விடிய விடிய போராட்டம்
ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் டேங்கர் லாரி கிளீனர் உயிரிழந்ததைக் கண்டித்து கரூரில் பெட்ரோலிய முனையம் முன்பு டேங்கர் லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் அருகேயுள்ள ஆத்தூரில் பாரத் பெட்ரோலிய முனையம் (டெர்மினல்) உள்ளது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் கொண்டு செல்லப்படுகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (59), கிளீனர். இவர் லாரியில் பெட்ரோல் நிரப்புவதற்காக ஓட்டுநருடன் லாரியில் நேற்று (நவ.22-ம் தேதி) காத்திருந்தார்.
அப்போது செல்வமணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாரத் பெட்ரோலிய நிறுவன ஆம்புலன்ஸில் செல்வமணியை அழைத்துச் செல்ல ஓட்டுநர்கள் கேட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வரத் தாமதமான நிலையில் செல்வமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டேங்கர் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் பணிகளைப் புறக்கணித்து பாரத் பெட்ரோலிய முனைய நுழைவாயில் பகுதியில் செல்வமணியின் சடலத்தை வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்வமணியின் குடும்பத்தினர், உறவினர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆம்புலன்ஸைத் தாமதமாக வழங்கியதால் ஒரு உயிர் பறிபோகக் காரணமான பாரத் பெட்ரோலிய முனைய நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வாங்கல் போலீஸார், ஓட்டுநர்கள், கிளீனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், செல்வமணியின் குடும்பத்தினரிடம் பாரத் பெட்ரோலிய முனைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரண்டிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்ல வேண்டிய 1,000க்கும் மேற்பட்ட டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
