Last Updated : 23 Nov, 2021 12:34 PM

 

Published : 23 Nov 2021 12:34 PM
Last Updated : 23 Nov 2021 12:34 PM

மழை பாதிப்பை ஆய்வு செய்ய வராத வேளாண் இயக்குநர்: மத்தியக் குழு முன்பு விரட்டித் தள்ளிய புதுவை விவசாயிகள்

படங்கள்: எம்.சாம்ராஜ்.

புதுச்சேரி

மழை பாதிப்பின்போது ஆய்வு செய்ய வராததால் மத்தியக் குழு முன்பாக புதுச்சேரி வேளாண்துறை இயக்குநர் பாலகாந்தியை விவசாயிகள் விரட்டினர்.

புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்புகளை மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். மத்திய உள்துறை இணைச் செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவானது, முதலில் புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பு மற்றும் வீடுகள் சேதத்தைப் பார்வையிட்டது. குழுவிடம் மீனவர்கள், தொடர் கடல் அரிப்பால் தூண்டில் முள்வளைவு தேவை என்று கோரினர்.

அடுத்து இந்திரா காந்தி சதுக்கம் அருகே உள்ள குடியிருப்பு பாதிப்புகள், மணவெளி பகுதியிலுள்ள என்.ஆர்.நகர்ப் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் பாதிப்பைப் பார்வையிட்டனர்.

மணவெளி தொகுதிக்குட்பட்ட என்.ஆர்.நகரில் மழை வெள்ளத்தால் சிக்கிய 80 குடும்பங்களைப் பேரிடர் மீட்புக் குழு மீட்டது. இந்த இடத்தை மத்தியக் குழு ஆய்வு செய்தது. அப்போது பாதிக்கப்பட்ட மக்கள், மத்தியக் குழுவினரைத் தங்களது பகுதிக்குள் வருமாறு உள்ளே அழைத்துச் சென்றனர். அப்போது தொகுதி எம்எல்ஏவும் பேரவைத் தலைவருமான செல்வம் பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவிடம் விளக்கினார்.

"புதுச்சேரி- கடலூர் சாலையில் பழைய பாலம் உடைந்துவிட்டது. இங்கு இருவழிப் பாலம் அமைக்க வேண்டும், பாலத்திற்குக் கீழ் தடுப்பணை அமைத்தால் ஊருக்குள் மழை வெள்ளம் வருவதைத் தடுக்க முடியும்" என மத்தியக் குழுவிடம் மக்கள் தெரிவித்தனர்.

இறுதியாக பாகூர் கிராமப் பகுதியில் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளை மத்தியக் குழுவினர் பார்க்க வந்தனர். அவர்களுடன் வந்த வேளாண் இயக்குநர் பாலகாந்தியை விவசாயிகள் முற்றுகையிட்டுத் திரும்பிச் செல்லக்கூறி கோஷமிட்டனர். ஒரு கட்டத்தில் அவரைப் பிடித்துத் தள்ளினர். போலீஸார் அவரை மீட்டனர்.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், "பாதிக்கப்பட்ட நேரத்தில் ஒரு முறைகூட வேளாண்துறை இயக்குநர் பாலகாந்தி இப்பகுதியில் ஆய்வு செய்யவில்லை. விவசாயிகளுக்கு எதிராக அவர் செயல்படுகிறார். சித்தேரி அணைக்கட்டில் இரண்டு ஷட்டர்கள் பழுதடைந்து பல ஆண்டுகளாகியும் சரிசெய்யவில்லை. வாய்க்காலைத் தூர்வாரவில்லை. மிக மோசமாகச் செயல்படுவதுடன் பணி செய்யும் அதிகாரிகளையும் தரக்குறைவாகப் பேசுகிறார்" எனக் குறைகளைத் தெரிவித்தனர்.

அங்கிருந்து அகன்ற வேளாண்துறை இயக்குநர் மத்தியக் குழுவுடன் இணைந்தார். அப்போது தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார், விளைநிலங்கள் பாதிப்பால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் தந்து உதவ வேண்டும் என்று மத்தியக் குழுவிடம் விளக்கினார்.

பின்னர் முள்ளோடை பகுதியில் சேதமடைந்த மின்சாதனப் பொருட்கள் குறித்தும், பரிக்கல்பட்டு கிராமத்தில் தண்ணீருக்குள் பயிர்கள் மூழ்கி உள்ளதையும் பார்வையிட்டனர்.

புதுச்சேரியில் இருந்து கடலூருக்குப் புறப்பட்ட மத்தியக் குழுவிடம் புதுச்சேரி எல்லையான முள்ளோடையில் திமுக எம்எல்ஏக்கள் சார்பில் கூட்டாக மனு தரப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரான சிவா கூறுகையில், "புதுச்சேரியில் கடந்த புயலின்போது கணக்கெடுப்பு ஆய்வு நடத்தப்பட்டபோது நிதி வழங்கவில்லை. அதனால் விவசாயிகள் கோபமடைந்துள்ளனர். ஆளுநர் தமிழிசை உடனடியாக மத்திய அரசிடம் பேசி குறைந்தபட்ச நிவாரண நிதியாக ரூ.500 கோடி பெற்றுத்தருவது அவசியம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x