Published : 23 Nov 2021 12:13 PM
Last Updated : 23 Nov 2021 12:13 PM

காவல்துறையின் துணிச்சல்மிக்க நடவடிக்கைகள் தொடரட்டும்: ஆய்வாளர் மாதய்யனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனின் வீரதீரச் செயலைப் பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாதய்யனுக்கு முதல்வர் அளித்த வாழ்த்து மடல்:

''சட்டம் - ஒழுங்குக்குச் சவால் விடும் குற்றவாளிகளின் கொட்டத்தை அடக்கி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்குரிய சூழலை உறுதி செய்வதே காவல்துறையின் முதன்மைப் பணியாகும். அத்தகைய பணியைத் திறம்படச் செய்யும் சீருடைப் பணியாளர்கள் மக்களின் உண்மை நாயகர்களாகி பெருமதிப்பினைப் பெறுகிறார்கள்.

கோவை சூலூர் காவல் நிலைய ஆய்வாளரான தாங்களும் தங்கள் காவல் நிலையத்தின் காவலர்களும் நீலாம்பூர் பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியை மேற்கொண்ட நிலையில், அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த சந்கேத்திற்கிடமான இரண்டு இளைஞர்களைத் தாங்கள் விசாரிக்கையில், சரியான பதில் சொல்ல முடியாத அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்றபோது, அவர்களைத் தடுக்க முயன்று சண்டையிட்டதில், தங்கள் சட்டை கிழிந்த நிலையிலும், ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அவர்களில் ஒருவரைத் தாங்களும் காவலர்களும் பிடித்திருக்கிறீர்கள். அந்த நபரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மற்றொரு நபரையும் அடையாளம் கண்டு, இருவரையும் கைது செய்து, அவர்கள் வசமிருந்த திருட்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்திருக்கிறீர்கள்.

மக்கள் உழைத்துச் சம்பாதித்த மோட்டார் சைக்கிள்களைத் திட்டமிட்டுத் திருடிவந்த நபர்களை, தாங்கள் உயிருக்கு அஞ்சாமல் போராடிச் சட்டத்தின் முன் நிறுத்தியதன் மூலம், மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறீர்கள். தங்களின் துணிச்சல் மிக்க செயல்பாடு, காவல்துறையில் உள்ள நேர்மையான- துணிச்சலான அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாகும்.

தங்களின் வீரதீரச் செயலைத் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் பாராட்டியுள்ள நிலையில், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் என்ற முறையில் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டம் - ஒழுங்கைச் சமரசமின்றி நிலைநாட்டும் தமிழ்நாடு காவல்துறையினரின் துணிச்சல் மிக்க இத்தகைய நடவடிக்கைகள் தொடரட்டும்''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x