

சேலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் இடிந்து விழுந்ததில், பெண் ஒருவர் உயிரிழந்தார். 13 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால், அதனை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சேலம் கருங்கல்பட்டியில் அடுத்தடுத்த வீடுகள் நிறைந்த இடத்தில், வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.
இதில் இரு மாடி வீடுகள் இடிந்து விழுந்தன. அருகில் இருந்த சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனிடையே, வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பலர் சிக்கினர்.
தகவலறிந்து தீயணைப்பு படையினர், போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிருஸ்துராஜ், மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உள்ளிட்டோரும் மீட்பு பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த ராஜலட்சுமி என்ற மூதாட்டி உள்ளிட்ட 4 பெண்கள், பூஜாஸ்ரீ என்ற சிறுமி, சுதர்சன் என்ற சிறுவன் உள்பட 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் இடிந்து விழுந்த வீடுகளை, கிரேன் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.