Published : 23 Nov 2021 11:12 AM
Last Updated : 23 Nov 2021 11:12 AM

கரூர் வாகன ஆய்வாளரின் உயிரைப் பறித்த வேன் பறிமுதல்: தலைமறைவான ஓட்டுநருக்கு வலைவீச்சு

கரூர் வெங்கக்கல்பட்டியில் மோட்டார் வாகன ஆய்வாளர் மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டு தாந்தோணிமலை காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது.

கரூர்

கரூரில் வாகன சோதனையின்போது மோட்டார் வாகன ஆய்வாளரின் உயிரைப் பறித்த வேனைப் பறிமுதல் செய்த போலீஸார், தலைமறைவான ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

கோவை விமான நிலையம் மதுசூதனன் தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ் (57). கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் கரூர், திருச்சி தேசிய புறவழிச் சாலையில் கனகராஜ் நேற்று (நவ.22-ம் தேதி) காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஏற்றுமதி ஜவுளி உற்பத்தி நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிவந்த வேனை கனகராஜ் நிறுத்தக் கூறியுள்ளார். அப்போது வேன் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் கீழே விழுந்த தலை மற்றும் இடது கையில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கனகராஜைப் பரிசோதனை செய்த டாக்டர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்துத் தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கனகராஜ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்பத்திய ஓட்டுநர் சுரேஷ்

மேலும் கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய வேன் பஞ்சப்பட்டி பகுதியிலிருந்து ஏற்றுமதி ஜவுளி உற்பத்தி நிறுவனத்திற்குத் தொழிலாளர்களை ஏற்றி வந்ததும், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் தொழிலாளர்களை அவர்களின் வீடுகளில் இறக்கிவிட்டு வேனை கடவூர் அடுத்துள்ள ஊத்துக்குளியில் உள்ள உரிமையாளர் வீட்டில் நிறுத்திவிட்டுத் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து நேற்றிரவு 12.30 மணி அளவில் வேனைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் தாந்தோணிமலை காவல் நிலையத்திற்குக் கொண்டுவந்தனர். மேலும் தலைமறைவான தோகைமலை அருகேயுள்ள உடையபட்டியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சுரேஷ் (28) என்பவரைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x