

பனைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் அதுசார்ந்த தொழில்களுக்கு உதவித் தொகையுடன் பயிற்சிஅளிக்கப்படுவதோடு, தொழில் முனைவோருக்கு மானியத்துடன் வங்கிக் கடன் பெறவும் வழிகாட்டுகிறது மத்திய பனைவெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் நிறுவனம்.
தமிழக ரேசன் கடைகளில் பனைவெல்லம் விற்கும் திட்டத்தை அரசுஅறிவித்திருப்பதால் பனை பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி பெற மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும்நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ், சென்னை மாதவரத்தில் மத்திய பனைவெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு பனைப்பொருட்கள் சார்ந்த தொழில்களுக்கு 4 மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர்ந்து பயிற்சி பெறுவோருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதுபோல், பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி 2 மாதம் அளிக்கப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இப்பயிற்சி பெறுவோருக்கு தங்குமிடம் இலவசம்.
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்யப்படும் என்றுஅரசு அறிவித்திருப்பதால், இப்பயிற்சிகளில் சேர்வதற்கு மக்களிடம் ஆர்வம் அதிகரித்திருப்பதாக மேற்கண்ட பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவைதவிர, குறைந்த கட்டணத்தில் தையல் பயிற்சி, பேக்கரி பொருட்கள் தயாரிப்பு, அடிப்படை அழகுக் கலை, உயர்நிலை அழகுக்கலை, கவரிங் நகை, சானிடரி நாப்கின், இனிப்பு, காரம் தயாரிப்பு, பழம், காய்கறிகளில் இருந்து உணவுப் பொருட்கள் தயாரிப்பு உட்பட14 வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ‘‘இந்த பயிற்சிகளுக்கு தனியார் நிறுவனங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எங்கள் நிறுவனத்தில் மிகக் குறைந்தகட்டணத்தில் பயிற்சிகள் நேர்த்தியாகவும், முறையாகவும் அளிக்கப்படுகிறது’’ என்கின்றனர் இந்நிறுவன அதிகாரிகள்.
மேலும், நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, மூலிகை சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, கணினி உட்பட 7 வகையான பயிற்சிகள் முன்னணி நிறுவனங்களுடன் சேர்ந்து அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி பெறுவோருக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இச்சான்றிதழைக் கொண்டு வங்கிக் கடன் பெற்று சுயமாக தொழில் தொடங்கவும் வழிகாட்டுகின்றனர். பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியம்கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக் கது.
இந்த நிறுவனத்தின் அதிகாரிகள்மேலும் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில், குறிப்பாக மகளிர் கல்லூரிகளில் இறுதியாண்டுமாணவிகளுக்கு பேக்கரி பொருட்கள் தயாரிப்புக்கான உபகரணங்களை கல்லூரிகளுக்கே எடுத்துச் சென்று பயிற்சி அளிக்கிறோம். கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாகஇவ்வாறு பயிற்சி அளித்து வருகிறோம். குறைந்தபட்சம் 30 பேர் பங்கேற்க வேண்டும். அவர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களையும், உரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும். பயிற்சிக்குப் பிறகு சான்றிதழ் வழங்குகிறோம். இதன்மூலம் பல மாணவிகள் சுயதொழில் முனைவோராக மாறியுள்ளனர்’’ என்றனர்.
தொழில் முனைவோருக்கு, பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 15 சதவீதம் முதல்35 சதவீதம் வரை மானியம்கிடைக்கும்.