

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் 2 பிரிவாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு நடத்துகின்றனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்தன. தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்ய ரூ.2,629 கோடியை நிவாரணமாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. நேற்று முன்தினம் சென்னை வந்த இக்குழுவினர், தலைமைச் செயலாளரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ள பாதிப்பு தொடர்பான புகைப் படங்களையும் பார்வையிட்டனர்.
அதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து, மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நேற்று ஆய்வை தொடங்கினர். உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில், விஜய் ராஜ்மோகன், ரனஞ்செய் சிங், எம்.வி.என்.வரபிரசாத் ஆகியோரைக் கொண்ட ஒரு பிரிவினர், நேற்று காலை சென்னை திருவிக நகர் மண்டலத்துக்குட்பட்ட வீராசெட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஜவகர் நகர் பகுதிகளிலும், ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட அழகப்பா சாலையிலும் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பாதிப்புகள் குறித்து அவர்களிடம் விளக்கினர்.
அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு சென்ற மத்திய குழுவினர், முடிச்சூர், வரதராஜபுரம், புவனேஸ்வரி நகர் பகுதிகளை பார்வையிட்டனர். அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மத்திய குழுவினரிடம் விவரித்தனர். நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி மனுக்கள் அளித்தனர். புவனேஸ்வரி நகரில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்ட மத்திய குழுவினர், விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதன்பின், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே வெள்ளச் சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வடபட்டினம் பகுதியில் சேதமடைந்த வேளாண் பயிர்களை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உடன் இருந்தார்.
இதையடுத்து, ராஜிவ் சர்மா தலைமையிலான குழுவினர் நேற்றிரவு புதுச்சேரி சென்றனர். அங்கு, முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினர். புதுச்சேரியில் இன்று வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் குழுவினர், பின்னர் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்.
கன்னியாகுமரியில்..
மத்திய நிதி அமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையிலான மற்றொரு பிரிவினர், கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை நேற்று பார்வையிட்டனர். இக்குழுவில் நீர்வள அமைச்சக இயக்குநர் தங்கமணி, எரிசக்தி அமைச்சக உதவி இயக்குநர் பவ்யா பாண்டே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவினர் வடக்கு தாமரைக்குளம் பிள்ளைபெத்தான் அணைக் கட்டுக்கு சென்று அங்கு உடைப்பு ஏற்பட்ட பகுதிகளையும், குமார கோயிலில் கால்வாய் கரையில் இரு இடங்களில் ஏற்பட்ட உடைப் பையும் பார்வையிட்டனர். பின்னர் பேயன்குழிக்கு சென்ற மத்தியக் குழுவினர், ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி பெருமளவு பாதிப்பு ஏற்படக் காரணமான இரட்டைக்கரை பாசனக் கால்வாய் உடைப்பு மற்றும் சேதங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் நாகர்கோவில் வந்த அவர்கள், ஒழுகினசேரி அப்டா சந்தை அருகே சேதமடைந்த நெல் வயல்களையும், தேரேகால்புதூர், திருப்பதிசாரம் ஆகிய இடங்களில் மழையால் துண்டிக்கப்பட்ட சாலைகள் மற்றும் சேதமான பாலத்தையும் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், எஸ்பி பத்ரிநாராயணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வு குறித்து மத்தியக் குழு வினர் கூறும்போது, ‘‘நாங்கள் பார்க்காத இடங்களை விட்டுவிட்டதாக சொல்ல முடியாது. அனைத்து சேத விவரங்களும் மாவட்ட நிர்வாகம் தந்துள்ள அறிக்கையில் உள்ளது. தமிழகத்தில் சேதங்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் அறிக்கை தயார் செய்து, மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்’’ என்றனர்.
மாலையில் ஆய்வை முடித்துக் கொண்டு கன்னியாகுமரியில் இருந்து மத்தியக் குழுவினர் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றனர். இந்தக் குழுவினர் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ள சேதங்களை இன்று பார்வையிடுகின்றனர்.