Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM

தமிழக அரசை வலியுறுத்தி 8 நாட்கள் ஆர்ப்பாட்டம்; பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வரை போராடுவோம்: சென்னையில் நடந்த போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி பாஜக இளைஞர் அணி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை

பெட்ரோல், டீசல் மீதான தமிழக அரசின் வரியை குறைக்க வலியு றுத்தி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழகம் முழுவதும் 8 நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி பாஜக இளைஞர் அணி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமையில் நடந்தஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய அரசு வெகுவாக குறைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை பாஜக ஆளும் மாநிலங்கள் குறைத்தன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்கூட வரிகளை குறைத்துவிட்டன. இதனால், தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரியில் தமிழகத்தைவிட குறைவாக உள்ளது.

எனவே, பெட்ரோல், டீசல் மீதானதமிழக அரசின் வரியை குறைக்கக் கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழக அரசு விலையை குறைக்கும் வரை போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 நாட்கள் போராட்டங்கள் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மாட்டு வண்டி பயணம்

பெட்ரோல், டீசல் மீதான தமிழகஅரசின் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக இளைஞர் அணி, மகளிர் அணி சார்பில் 22-ம் தேதி(நேற்று) மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, இன்னும் 8 நாட்கள் பல்வேறு வடிவங்களில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும்.

அதன்படி, 26-ம் தேதி விவசாய அணி சார்பில் மாட்டுவண்டி பயணஆர்ப்பாட்டம், 27-ம் தேதி சிறுபான்மையினர் அணி, வழக்கறிஞர் அணி சார்பில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து கோரிக்கையின் நியாயங்களை விளக்குதல், 28-ம்தேதி எஸ்.சி., எஸ்.டி. அணிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முற்றுகை, 30-ம் தேதி ஓபிசி அணி, அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு சார்பில் மனித சங்கிலி போராட்டம், டிச.1-ம் தேதி மகளிர் அணி சார்பில் வீடுகள் முன்பு கோரிக்கை அட்டைகள் ஏந்துதல், 2-ம் தேதி கல்வியாளர் பிரிவு சார்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், 3-ம் தேதி பிரச்சாரப் பிரிவு, தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் தெருமுனை கூட்டங்கள் நடத்துதல் என்று போராட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x