அரசுப் பணியில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு: தமிழக அரசாணை எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அரசுப் பணியில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை எப்போது வெளியாகும் என, படித்த பெண்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தமிழக அரசுப் பணியில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவிலும் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. இதுதொடர்பான அறிவிப்பை கடந்தசெப்.13-ம் தேதி பேரவையில் நிதி மற்றும் பணியாளர் மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் அமோகவரவேற்பை பெற்றது. ஆனால்,இன்னும் அதற்கான அரசாணை வெளியிடப்படாததால் பெண்கள்ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பதே அதற்கு காரணம்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெண்கள் கூறியதாவது:

அரசுப் பணியில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியான அதேநாளில்தான், அரசுப் பணி நேரடி நியமனங்களுக்கு வயது வரம்பு 2 ஆண்டுகள் தளர்த்தப்படும் என்றஅறிவிப்பும் வெளியானது. அதற்குஉடனே அரசாணை வெளியிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது. ஆனால், பெண்களுக்கான 40 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு தொடர்பாக இதுவரை அரசாணை வெளிவரவில்லை. கடந்த செப்.9-ம் தேதிஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. 2 போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு 40 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான அரசாணை வெளியிட்டிருந்தால், அந்த 2 தேர்வுகளுக்கும் இது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும்.

டிஆர்பி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. எனவே, 40 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை உடனே வெளியிட வேண்டும். இதன்மூலம், படித்த பெண்கள் அதிகஎண்ணிக்கையில் அரசுப் பணியில் சேர்ந்து, பெண்களின் சமூக, பொருளாதார நிலை மேலும் உயரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பணியாளர் மேலாண்மைத் துறை அலுவலர்களிடம் இதுபற்றிகேட்டபோது, ‘‘அரசாணையை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அரசாணை வெளியாகும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in