

சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தஇளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் கங்காணிப்பட்டி அருகேயுள்ள மரவாமதுரையைச் சேர்ந்தவர் சின்னாண்டி மகன் ராஜ்குமார்(34). இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர், கருவுற்ற சிறுமியை கருக்கலைப்பு செய்யுமாறு மிரட்டியுள்ளார். இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சத்யா நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், “ராஜ்குமார் மீதானகுற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு இயற்கைமரணம் அடையும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
மேலும், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ஏற்கெனவே ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கியுள்ள நிலையில், தற்போது மேலும் ரூ.1.5 லட்சம் வழங்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த மாதவன்(27) என்பவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி சத்யா கடந்த 15-ம் தேதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.