

புதுக்கோட்டை அரசு மாணவிகள் விளையாட்டு விடுதியில் இரவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அந்த மாணவிகளிடம் பேசிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள விளையாட்டு விடுதியில் 55 மாணவிகள் தங்கியுள்ளனர். இவர்கள் தடகளம், எடை தூக்குதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கு இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த விடுதியில் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் மார்ச் 2-ம் தேதி இரவு 7.15 மணிக்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவிகளிடம் ஏராளமான கேள்விகளை கேட்ட அமைச்சர், அரசு அவர்களுக்கு செய்துவரும் திட்டங்கள் குறித்து அவர்களிடம் விளக்கினார்.
அப்போது, ஒரு மாணவி அணிந்திருந்த பனியனைப் பிடித்து, “இது யார் கொடுத்தது” என்று கேட்டதற்கு அந்த மாணவி, “விடுதியில்தான் கொடுத்தார்கள்” என்று கூறியுள்ளார்.
“கல்லூரி மாணவர்களுக்கு சாப்பாட்டுக்காக நபருக்கு மாதத்துக்கே ரூ.850-தான் கொடுக்கப் படுகிறது. ஆனால், உங்களுக்கு ஒரு நாளைக்கு தலா ரூ.250-க்கு உணவு அளிக்கப்படுகிறது” என்ற அமைச்சர், மற்றொரு மாணவியிடம், “உனக்கு எடை கூடியிருக் கிறதா” என கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி, “கூடியிருக்கிறது” என்று பதிலளிக்க, “இது உங்க அம்மாவுக்கு தெரியுமா” என்று அமைச்சர் கேட்டுள்ளார். அந்த மாணவியோ, “அப்பாவுக்குத்தான் தெரியும்” என்று சொல்ல, “ஏன், உங்க அம்மா, அப்பாவோடு இல்லையா” என்று கேட்டுள்ளார்.
பின்னர் வேறொரு மாணவியிடம், “உங்க அப்பா என்ன செய் கிறார்” என்று அமைச்சர் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி, “அப்பா இல்லை” என்று சொல்ல, “அப்பா இறந்துவிட்டாரா அல்லது வெளிநாடு, டிராவல்ல இருக்காரா” என்று அமைச்சர் கேட்க “இறந்துவிட்டார்” என்றார் அந்த மாணவி.
மற்றொரு மாணவியிடம், “இந்த ஷூவின் விலை எவ்வளவு தெரியுமா” என்று அமைச்சர் கேட்டுள் ளார். தயக்கத்துடன் பதில் கூறாமல் இருந்த அந்த மாணவியிடம், “இந்த ஷூவின் விலை ரூ.900” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
பின்னர் மாணவிகள் மத்தியில் பேசிய அமைச்சர், “ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு ரூ. 250-க்கு விதவிதமாக சோறு போட்டு, உடைகள், ஷூ எல்லாம் கொடுக்கப்படுகிறது. இவ்வளவும் அரசு செய்கிறதே, நீங்க தங்க மெடல் வாங்க வேண்டாமா? நிறைய தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவிக்க வேண்டும்” என்றார்.
இவ்வாறு இரவு நேரத்தில் விடுதிக்கு ஆய்வுக்கு சென்ற அமைச்சர், மாணவிகளை வரிசையில் நிற்க வைத்து, அவர்களிடம் கேள்விகள் கேட்ட விதமும், அதில் ஒரு மாணவியின் பனியனை பிடித்து லேசாக இழுத்ததும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் தரப்பில் கூறியது: காரைக்குடி அழகப்பா பல் கலைக்கழகத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை முடித்துவிட்டு ஆய்வுக்காக அமைச்சர் இங்கு இரவு சுமார் 7.15 மணிக்கு வந்தார். மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடைகள், உணவு இவற்றைப் பற்றி மாணவிகளிடமே கேட்டு அரசு வழங்கும் அனைத்து திட்டங் களும் மாணவிகளுக்கு கிடைப் பதை உறுதி செய்தார். பின்னர், எதிர்காலத்தில் நிறைய தங்கப் பதக்கங்களை வாங்க வேண்டு மென கேட்டுக்கொண்டார்.
மாணவியிடம், “உடல் எடை கூடி யுள்ளதா” என்ற கேள்வியானது, இங்கு வந்து சேர்ந்தபோது இருந் ததைவிட இங்கு அளிக்கப்படும் உணவால் எடை கூடி இருக்கிறதா என்ற விதமாகத்தான் அமைச்சர் கேட்டார். ஆனால், கேட்கப்பட்ட விதமும், மாணவியின் பனியனை தொட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. சுமார் அரை மணி நேர ஆய் வுக்குப் பின்னர், அமைச்சர் புறப் பட்டுச் சென்றுவிட்டார் என்றனர்.
இதுகுறித்து கருத்து கேட்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜை நேற்று மாலை தொடர்ந்து பல முறை முயற்சி செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. “நான் உங்கள் வீட்டுப்பிள்ளை” என்ற பாடல் மட்டுமே ஒலித்தது.