வெள்ளம் பாதித்தவர்களுக்கு சசிகலா நிவாரணம்: சென்னை, பூந்தமல்லி பகுதிகளில் வழங்கினார்

பூந்தமல்லி, கோரிமேடு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவிகளை சசிகலா வழங்கினார்.
பூந்தமல்லி, கோரிமேடு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவிகளை சசிகலா வழங்கினார்.
Updated on
1 min read

சென்னை, பூந்தமல்லி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார்.

கன மழை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பல்வேறு இன்னலுக்குள்ளாயினர்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில், நேற்று சென்னையில் தி.நகர்- லாலா தோட்டம், ராமாபுரம் உள்ளிட்ட 3 பகுதிகளை சசிகலா பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, கோரிமேடு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

அப்போது, சசிகலா பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று, பெண்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அப்பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அப்போது சசிகலா பேசும்போது, "வெள்ள பாதிப்பு குறித்து கேள்விப்பட்டு அதைப் பார்க்க வந்திருக்கிறேன். சென்னையில் வெள்ள பாதிப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். என் வீட்டைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியதை காப்பாற்றும் வகையில், என்னால் முடிந்ததை உங்களுக்கு செய்வேன்" என்றார்.

இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை அமமுக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in