Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

பாமக தனித்துப் போட்டியிட்டு புதுச்சேரியில் ஆட்சிக்கு வர முடியும்: மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

புதுச்சேரி மாநில பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சி நிறுவனர் ராமதாஸ், அருகில் கட்சித் தலைவர் ஜி.கே.மணி. படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

பாமக தனித்துப் போட்டியிட்டு, 6 இடங்களைப் பெற்றாலே புதுச்சேரியில் ஆட்சிக்கு வந்து விட முடியும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பட்டானூரில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகித்தார். இக்கூட்டம் தொடங்கியவுடன், படுகொலை செய்யப்பட்ட காரைக்கால் மாவட்ட பாமக செயலர் தேவமணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

நிர்வாகிகள் மாற்றம்

“நாம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற, கட்சியில் மாற்றமும் செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், அதன்படி, புதுச்சேரி மாநில பாமக அமைப்பாளராக கணபதியை நியமிப்பதாக அறிவித்தார். அரசியல் ஆலோசனைக் குழு தலைவராக முன்னாள் எம்பி தன்ராஜ், உறுப்பினர்களாக வடிவேல், துரை, மதியழகன், பிரபாகரன் ஆகியோர் செயல்படுவார்கள் என்று தெரிவித்தார். புதுச்சேரியில் நான் உழைத்த உழைப்பெல்லாம் வீணாகிப் போனது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஓரிரண்டு தொகுதிகளில் கூட வெல்ல முடியவில்லை. கட்சியை வளர்த்த நிலையில் பலர் பதவியை அனுபவித்து விட்டு, நன்றி மறந்து சென்று விட்டனர். புதுச்சேரியில் பாமக ஆட்சிக்கு வர வேண்டும். கட்சியைப் பலப்படுத்த இனி நாம் அரசியல் செய்யாமல் பாசப் பிணைப்பையே ஏற்படுத்த வேண்டும்.

‘புதுவையை விட்டு விட்டீர்களே!’ என பலரும் என்னைத் தொடர்பு கொண்டு கேட்கின்றனர். இதே மாநிலத்தில் என்னை கொலை செய்ய முயற்சித்தனர். ஆனால் அன்று தப்பித்தேன். புதுவையில் கொள்கை உடைய கட்சியாக பாமக உள்ளது. மீண்டும் புத்துயிர் பெற்று வேகமாக செயல்பட்டு, புதுச்சேரியில் 4 தொகுதிகளிலும், காரைக்காலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். நாம் தனித்துப் போட்டியிட்டு இங்கு 6 இடங்களைப் பெற்றாலே ஆட்சிக்கு வந்து விட முடியும். கூட்டணியெல்லாம் வேண்டாம், வெற்றிக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அதற்காக வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரம் செய்யுங்கள் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x