அதிமுக ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சின்னாபின்னமாகிவிட்டன: திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சின்னாபின்னமாகிவிட்டன: திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Updated on
2 min read

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சின்னாபின்னமாகிவிட்டன என, திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிந்த பணிகளை தொடங்கி வைக்கும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் இன்று நடந்தது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

நிகழ்வில் ஆட்சியர் சு.வினீத் வரவேற்றார்.

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசுகையில், "முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் 3-வது முறையாக திருப்பூர் வருகிறார். 2 முறை கரோனா பெருந்தொற்று காலத்தில் வந்தவர், அதனைக் கட்டுப்படுத்தி இன்றைக்கு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க வந்துள்ளார். திருப்பூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது மற்றும் மாவட்டமாகவும் மாற்றப்பட்டது திமுக ஆட்சியில் தான்" என்றார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசும்போது, “தாராபுரம் தொழில்துறையில் திருப்பூர் அளவுக்கு இல்லாவிட்டாலும், இதேபோன்று தொழில்துறையை அங்கு முன்னேற்ற வேண்டும்” என்றார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நம்மை ஆளாக்கிய தந்தை பெரியாரும், அண்ணாவும் முதன் முதலாக சந்தித்த இடம் திருப்பூர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்துள்ளேன். 4 ஆயிரத்து 335 பேருக்கு ரூ. 55 கோடியே 60 லட்சத்து 83 ஆயிரத்து 272 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களில் இந்த நிகழ்வை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதனும், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் வெற்றிகரமாக செய்துள்ளனர். 18 அரசுத்துறைகள் சார்பில் இந்த இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 335 பேர் என்பது எண்ணிக்கையல்ல. அது 4 ஆயிரத்து 335 குடும்பங்கள். அடுக்குமாடி குடியிருப்பு ஆணை, சிறு,குறு நிறுவனங்கள், முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகள், மருத்துவக் காப்பீடு என அனைத்து தரப்பு தமிழகத்தையும் மேம்படுத்தக்கூடிய அரசாக தமிழக அரசு உள்ளது. ஒரு ஆட்சியின் அரசாக இது இருக்காது. இனத்தின் அரசாக, அனைத்து தரப்பு தமிழர்களையும் மேம்படுத்தும் அரசாக இருக்கும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, நான் துணை முதல்வராக இருந்தபோது கடன் வழங்குவோம். 5ஆயிரம் பேர் என்றாலும் நின்று அனைவருக்கும் கொடுத்துவிட்டு தான் செல்வேன்.

தர்மபுரியில் 1989-ம் ஆண்டு கருணாநிதியால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் தொடங்கியபோது, பெண்கள் தன்மானம், தன்னம்பிக்கையாக இருக்க வேண்டும் என்றார். ஆனால் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சின்னாபின்னமாகிவிட்டன.

இந்த நிகழ்வில் மகளிர் சுய உதவிக்குழுக்களை புதுப்பித்த்திடும் வகையில் ரூ. 25 கோடி கடன் நிதி வழங்கப்படுகிறது. மகளிர் சமுதாயம் மீது தமிழக அரசு அக்கறை கொண்டுள்ளது. 2 ஆயிரத்து 189 சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ. 171.19கோடி முதலீட்டு மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் செய்த திட்டங்களை போல் இன்னும் நிறைய திட்டங்களை அடுத்த நான்கரை ஆண்டுகளில் செய்ய உள்ளோம்.

அனைவரும் நம்பர் 1 தமிழ்நாடு என்று சொல்கிறார்கள். இதனை தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த பெருமையாகத்தான் நினைக்கிறேன். நம்பர் 1 ஸ்டாலின் என்பதைக்காட்டிலும், நம்பர் 1 தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலையை உருவாக்குவோம் என்றார்.

இதில், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், சு.முத்துசாமி, ராமச்சந்திரன், எம்.பி.க்கள் ராஜா, கணேசமூர்த்தி, சண்முகசுந்தரம், அந்தியூர் செல்வராஜ், கே.சுப்பராயன் மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in