

ராமேசுவரத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்கிய காவலர் சத்தியராஜை ராமநாதபுரம் எஸ்.பி ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளார்.
ராமேசுவரம் சல்லிமலை தெருவைச் சேர்ந்தவர் எஸ். குமரன் (40). இவர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ராமேசுவரம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.
தான் வசித்து வரும் பகுதியில் குடிபோதையில் சிலர் பிரச்சினை செய்து வருவது தொடர்பாக ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த காவலர் சத்யராஜ் என்பவர் புகார் அளிக்கச் சென்ற செய்தியாளரை ஒருமையுடன் பேசி மிரட்டியதுடன் தாக்கி காயப்படுத்தியும் உள்ளார்.
பின்னர் அவர் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து குமரன் புகார் அளிக்க வந்த தன் மீது தாக்குதல் நடத்திய காவலரை பணியிடை மாற்றம் செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
செய்தியாளர் குமரன் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்திய ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் காவலர் சத்தியராஜை தற்போது ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளார்.
ராமேசுவரத்தில் தொடர்ந்து காவல்துறையினர் செய்தியாளர்களை தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தமிழக பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.