Published : 22 Nov 2021 05:13 PM
Last Updated : 22 Nov 2021 05:13 PM

பாலாற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 14 வீடுகள்

வேலூர் வடவிரிஞ்சிபுரம், காமராஜபுரம் கிராமத்தில் பாலாற்றின் கரையோரத்தில் மண் அரிப்பால் 14 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மேலும் பல வீடுகள் எந்த நேரமும் வெள்ளத்தில் இடிந்து விழலாம் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டத்துக்கு உட்பட்ட வட விரிஞ்சிபுரம் காமராஜபுரம் கிராமத்தில் மொத்தம் 191 வீடுகள் உள்ளன. இதில், பள்ளிக்கூடத் தெருவில் பாலாற்றின் கரையோரத்தில் 28 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பாலாற்றில் கடந்த 17ஆம் தேதி முதல், வெள்ளப்பெருக்கு அதிகரித்த நிலையில், 600க்கும் மேற்பட்ட காமராஜபுரம் கிராமப் பொதுமக்களை வருவாய்த் துறையினர் பத்திரமாக அப்புறப்படுத்தினர். அனைவரையும் வட விரிஞ்சிபுரம் வேளாண் விரிவாக்க மையம், வடுகன்தாங்கல் அரசினர் உயர்நிலைப் பள்ளி மற்றும் கவசம்பட்டு அரசினர் பள்ளியில் பாதுகாப்புடன் தங்க வைத்துள்ளனர்.

இதற்கிடையில், பாலாற்றின் கரையோரத்தில் உள்ள 28 வீடுகளில் கடந்த 3 நாட்களில் 11 வீடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. கரையோரத்தில் மீதமுள்ள வீடுகளும் எந்த நேரத்திலும் ஆற்றில் சரிந்து அடித்துச் செல்லும் என்பதால் வீட்டின் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்களது கண் எதிரிலே வீடுகள் அடித்துச் செல்வதைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுது வருகின்றனர். இன்று (நவ.22) காலை மேலும் 3 வீடுகள் இடிந்து ஆற்றில் விழுந்தன. வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. வெள்ளத்தில் வீடுகள் இடிந்துவிழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதுகுறித்து காமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் கூறும்போது, ‘‘இதுவரை 14 வீடுகள் இடிந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மண் அரிப்பால் மேலும், 4 வீடுகள் எந்த நேரமும் சரிந்து விழலாம். கிராமத்தின் கரையோரம் வெள்ளம் வராமல் இருக்க ஆற்றின் நடுப்பகுதியில் வெடிவைத்து திசை திருப்பிவிட வேண்டும். பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இடத்தை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, ''ஆற்றின் கரையோரத்தில் மண் அரிப்பால் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்க ஏற்பாடுகள் செய்துவிட்டோம். சேதமடைந்த வீடுகளுக்கு அரசின் சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும்'' என்று கதிர் ஆனந்த் உறுதியளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x