ஓசூர் வனக்கோட்டத்தில் அதி கனமழையால் நிரம்பிய 200 ஏரிகள்: வனவிலங்குகள் குதூகலம்

ஓசூர் வனச்சரகத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ள உங்கட்டி ஏரி.
ஓசூர் வனச்சரகத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ள உங்கட்டி ஏரி.
Updated on
1 min read

ஓசூர் வனக்கோட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் அதி கனமழை காரணமாக வனத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரிகள் முழுவதுமாக நிரம்பி வழிகின்றன. இதனால் குதூகலமடைந்துள்ள வனவிலங்குகள், கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளை நாடி வரத்தொடங்கி உள்ளதால், வனவிலங்குகளின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, ஜவளகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த 7 வனச்சரகங்களில் கடந்த சில நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனச்சரகங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரிகள், 50க்கும் மேற்பட்ட தண்ணீர்த் தொட்டிகள் ஆகியவற்றில் மழை நீர் நிரம்பி வழிகிறது.

இதுகுறித்து ஓசூர் வனச்சரகர் ரவி கூறும்போது, ''ஓசூர் வனக்கோட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் வனத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக ஓசூர் வனச்சரகத்தில் உள்ள சானமாவு, அத்திமுகம், சூளகிரி, அமுதகொண்டப்பள்ளி உள்ளிட்ட 21 காப்புக்காடுகளில் உள்ள 30 ஏரிகளும் மற்றும் 5 தண்ணீர்த் தொட்டிகள், கசிவுநீர்க் குட்டைகள், தடுப்பணைகள் ஆகியவையும் மழை நீரால் நிரம்பி வழிகின்றன.

இதில் அத்திமுகம் காப்புக்காட்டில் உள்ள உங்கட்டி ஏரி 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. அதேபோலப் பல ஆண்டுகளாக வறண்ட நிலையில் இருந்த பல ஏரிகளும் நடப்பாண்டு கனமழையால் நிரம்பியுள்ளன. இதனால் குதூகலமடைந்துள்ள வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக நீர் நிலைகளை நாடி வரத் தொடங்கியுள்ளன. இதனால் வன விலங்குகளின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது'' என்று வனச்சரகர் ரவி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in