தமிழகத்தில் பிறக்க வேண்டும் என நினைத்திருந்தேன்: சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி பேச்சு

தமிழகத்தில் பிறக்க வேண்டும் என நினைத்திருந்தேன்: சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி பேச்சு
Updated on
1 min read

தமிழகத்தில் பிறக்க வேண்டும் என நினைத்திருந்தேன் என சென்னை உயர் நீதிமன்றப் புதிய பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவியேற்பு விழாவில் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றப் புதிய பொறுப்புத் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் முனீஸ்வர் நாத் பண்டாரி பேசும்போது, “ தமிழகத்தில் பிறக்க வேண்டுமென நினைத்திருந்த எனக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றதன் மூலம் அந்தக் கனவு நனவாகியிருக்கிறது.

பதவியேற்பு உறுதிமொழி ஏற்றதுபோல், நீதி பரிபாலனத்தில் பயமோ, பாரபட்சமோ இருக்காது. இந்த விழாவில் நிறைய பேச விரும்பவில்லை. ஆனால், எதையும் செயலில் காட்டவே விரும்புகிறேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தமிழ் கற்கத் தொடங்கியுள்ளேன். வணக்கம், நன்றி ஆகியவற்றைக் கற்றுக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

யார் இந்த பண்டாரி?

பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, 1960-ம் ஆண்டு செப்.13-ம் தேதி ராஜஸ்தானில் பிறந்தார். அம்மாநில அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், ரயில்வே மற்றும் அணுசக்தித் துறையின் வழக்கறிஞராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். 2007-ம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 2019-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அந்த உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாகக் கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை பணியாற்றினார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இவரையும் சேர்த்தால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மொத்தப் பணியிடங்கள் 75. இன்னும் 15 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in