Published : 22 Nov 2021 01:31 PM
Last Updated : 22 Nov 2021 01:31 PM

பணிக்காலம் சிறப்புற அமைந்திட வாழ்த்துகள்: சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதிக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை

பணிக்காலம் சிறப்புற அமைந்திட வாழ்த்துகள் என சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

இவ்விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பொறுப்பு தலைமை நீதிபதிக்கு மலர்க்கொத்தும், நினைவுப் பரிசும் வழங்கி வாழ்த்தினார்.

விழாவில், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி, மூத்த வழக்கறிஞர்கள், தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், "இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்ட முனீஸ்வர் நாத் பண்டாரிக்குப் புத்தகங்கள் அளித்து அவரது பணிக்காலம் சிறப்புற அமைந்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x