

தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 14 ஆயிரம்மெகாவாட். இது கோடைகாலத்தில் 16 ஆயிரம் மெகாவாட் என்றஅளவுக்கு உயரும். குளிர்காலத்தில் 11 ஆயிரம் மெகாவாட் என குறையும்.
மின்வாரியத்தின் அனல்மின் நிலையம், நீர்மின் நிலையம், எரிவாயு மின்நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் தினசரி மின்தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை.
இதனால், மத்திய அரசு மற்றும் தனியார் மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. எனினும், மின்தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.
இதற்கிடையில், நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும், புதிய அனல்மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடப்பதாலும் எதிர்கால மின்தேவையை சமாளிக்க கூடுதலாக மின்சாரம் வாங்க மின்வாரியம் முடிவு செய்தது.
இதற்காக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டு மின்வாரியம் விண்ணப்பித்தது.
இதை ஏற்று, அடுத்த 3 ஆண்டுகளுக்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.3.26 என்ற விலையில் வாங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.