Published : 22 Nov 2021 03:06 AM
Last Updated : 22 Nov 2021 03:06 AM

2 தவணை தடுப்பூசியும் போட்டால் 97.5% பாதுகாப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கரோனா தடுப்பூசி 2 தவணையும் போட்டுக் கொண்டவர்களுக்கு 97.5 சதவீத உயிர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் நேற்று 50 ஆயிரம் இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை எண்ணூர் தாழங்குப்பம் தொடக்கப் பள்ளியில் முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்து பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 6.49 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 4.32 கோடி பேருக்கு முதல் தவணையும், 2.17 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. 1.31 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும்பணி கடந்த 10-ல் தொடங்கப்பட்டு, இதுவரை 48.76 லட்சம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டவர்களுக்கு 97.5 சதவீத உயிர் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால்தான் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் 100 சதவீத முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் சென்னையில்தான் அதிக மழைப்பொழிவும், பாதிப்பும் இருந்தது. முதல்வர் ஆலோசனைப்படி சென்னையில் கடந்த 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 62.17 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 9,621 இடங்களில் நடத்தப்பட்ட மழைக்கால மருத்துவமுகாம்களில் 3.36 லட்சம் பேர்பயன்பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 38,566 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதில் 14.90லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த முகாம்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனாபரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக இந்த ஆண்டு அதிக அளவில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியைவிட தற்போது கூடுதல் அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆக.5-ம் தேதி முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 41 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். அதிமுக ஆட்சியில் ஓராண்டு செயல்படும் வகையில் 1,700 இடங்களில் பெயர் அளவுக்கு அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. இதன்மூலம் எவ்வளவு பேர் பயன்பெற்றனர், என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற புள்ளிவிவரத்தை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தரவேண்டும்.

தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 4,381 பேர் டெங்கு காய்ச் சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 544 சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x