

சென்னை தியாகராயநகரில் உள்ளபாஜக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்துபாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, மாநில துணை தலைவர்வி.பி.துரைசாமி ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போட்டியிட 500-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகு, கூட்டணிக் கட்சிகள் எங்கு நிற்கிறார்கள் என்பதை பொறுத்து முடிவு செய்வோம். அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. தேசியஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் பாஜக தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.
வேளாண் சட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் இச்சட்டம் வேண்டும் என்று அதிகமாக பேசியவர்களில் நானும் ஒருவன். விவசாய சட்டம் தவறு என்று இப்போதும் நான் கூறவில்லை. பிரதமர் மோடியின் பெருந்தன்மையின் காரணமாக வேளாண் சட்டங்கள் திரும்பபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் விவசாயிகள் இச்சட்டத்தை ஒட்டுமொத்தமாக ஏற்கக்கூடிய சூழல் வரலாம். அவ்வாறு, விவசாயிகள் வேண்டும் என்ற கேட்டால் இச்சட்டம் வரும்.
வெற்றி, தோல்வி இல்லை
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த நிகழ்வில் அமைச்சரின் மகன்கூட கைது செய்யப்பட்டுள்ளார். அதனால் யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கபடுவர். வேளாண் சட்டம் வாபஸ் பெற்றதில் வெற்றி, தோல்வி என்பது இல்லை. நீட்தேர்வை பொறுத்தவரை அனைத்துமாநிலத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல்காரணத்துக்காக நீட் தேர்வை எதிர்த்து கூக்குரலிட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் நீட் தேர்வு வருவதற்கு முன்புதான் அரசியல் ஆக்குகின்றனர். தேர்வின் முடிவுகள் அறிவித்த பிறகு அதைப் பற்றியாரும் பேசுவதுகூட இல்லை. புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் நீட் தேர்வு என்பது சாதாரண மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. எனவே, நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படாது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறை விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.