கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு; திமுக அரசின் திறமையற்ற நிர்வாகமே காரணம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு திமுக அரசின் திறமையற்ற நிர்வாகமே காரணம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்குப் பருவமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சாத்தனூர் அணையின் உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து, இரு மாவட்டங்களின் பல்வேறுபகுதிகள் தீவுபோல காட்சியளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, திமுக அரசின் திறமையற்ற நிர்வாகமே காரணம் என்றுபொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தென்பெண்ணை ஆற்றில் இருந்து வழக்கத்துக்கு மாறாக, 12 மடங்கு தண்ணீர், அதாவது 1.25 லட்சம் கனஅடி தண்ணீர்திறந்து விடப்பட்டதே பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாகும்.
அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால், மக்களின் உடைமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும். இந்தவெள்ளப் பெருக்கில் ஏராளமான கால்நடைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரியஇழப்பீட்டை வழங்கி, அவர்களது மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
