

மதுரை மாநகராட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெறும் நிகழ்வு மதுரை மாநகர் பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியினரிடம் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விருப்ப மனுக்களைப் பெற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை தமிழகத்தில் குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும். கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கும், பிரதமர் மோடிக்கும் சம்பந்தம் இல்லை.
சாலை போன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் வரி மூலம் தான் சரி செய்ய முடியும். விவசாய வருமானத்தை இரு மடங்காகப் பெருக்குவது, மானிய விலையில் உரம், பூச்சிக் கொல்லிகள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருந்தும் வேளாண் சட்டங்களை விவசாயிகள் ஏற்கவில்லை.
பாஜக இப்போதும் அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. மதுரை அம்மா உணவகத்தில் கருணாநிதி புகைப்படத்தை வைத்தது கண்டிக்கதக்கது. இதில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற நாவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது என்றார். மாவட்ட தலைவர் பா.சரவணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.