

காஞ்சிபுரம் மாநகராட்சி 27-வது வார்டு திருக்காலிமேடு பகுதியில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடந்த 2007-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. புதிய உயர்நிலைப் பள்ளிக்கு அவசர கதியில் அதேப் பகுதியில் உள்ள சின்ன வேப்பங்குளத்தின் கரையில் 2 வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கப்பட்டன.
இங்கு, தற்போது 125 மாணவர்கள், 97 மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடங்கள் குளத்தின் கரையில் கட்டப்பட்டுள்ளதால் விரிவுப்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் பள்ளி கட்டிடத்தின் அஸ்திவாரம் தண்ணீரால் சேதமடையும் வருவதாக கூறப்படுகிறது. மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்த முடியவில்லை.
இதனால், 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரே இடத்தில் புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்க நிலம் தேர்வுசெய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன்பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்,பள்ளிக்காக மஞ்சள் நீர் கால்வாய்அருகே உள்ள நிலத்தை பார்வையிட்டார். எனினும் நிலம்தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அசம்பாவிதம் ஏற்படும் முன் புதிய கட்டிடம் கட்டநிலம் தேர்வு செய்ய வேண்டும்என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறும்போது, “குளக்கரையில் பள்ளி கட்டிடம் உள்ளது என கூறுவதைவிட, குளத்தின் கரையாகவேஉள்ளது என்றுகூறலாம். கட்டிடத்தில் தண்ணீர் ஊறுவதால் சிறிது, சிறிதாக சேதமடைந்து வருகிறது. இதனால், 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய வகுப்பறைகளை ஒரே இடத்தில் அமைக்க விரைவாக நிலம் தேர்வு செய்ய வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் பன்னீர்செல்வம் கூறும்போது, “திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளிக்காக நிலம் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.மஞ்சள் நீர் கால்வாய் அருகேயுள்ள 5 ஏக்கர் கோயில் நிலம் கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.