

காரைக்குடி அருகே அரசு அதிகாரிகள் 2010-ல் கொடுத்த தகுதி அட்டைகளுடன் வீடு கேட்டு 11 ஆண்டுகளாக 80 நரிக்குறவர்கள் குடும்பத்தினர் அலைந்து வருகின்றனர்.
காரைக்குடி அருகே சங்கராபுரம் வேடன் நகரில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரம், குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இங்குள்ள 80 குடும்பங்களுக்கு சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் 2010-ம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத் தில் கான்கிரீட் வீடு பெறுவதற்கான தகுதி அட்டை வழங்கப்பட்டது. இந்த அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ஓராண்டுக்குள் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 11 ஆண்டுகளாகியும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதனால் அவர்கள் வீடு கேட்டு சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அலைந்து வருகின்றனர். ஊரக வளர்ச்சித் துறையில் தற்போது பசுமை வீடுகள் திட்டம் மற்றும் பிரதமர் குடியிருப்புத் திட்டம் மூலம் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏதாவது ஒரு திட்டத்தில் தங்களுக்கு வீடுகள் ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரிக்குறவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக நரிக்குறவர்கள் கூறுகையில், குடிசை வீடுகளில் வசித்து வரும் எங்களுக்கு அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ளது என 2010-ம் ஆண்டே தகுதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சம்பந்தப்பட்ட நரிக்குறவர்கள் நீர்நிலை பகுதியில் குடியிருப்பதால், வீடுகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்று கூறினர்.