

திருநெல்வேலியில் சாலையின் குறுக்கே மாடு புகுந்ததால் அதன் மீது மோதிய ஆட்டோ கவிழ்ந்தது. இதில், கணவன், மனைவி பலத்த காயம் அடைந்தனர். சாலையில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருநெல்வேலி, குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம் இரவு தனது மனைவி, 2 குழந்தைகளுடன் திருநெல்வேலி தெற்கு புறவழிச் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் குறுக்கே மாடு புகுந்துள்ளது. அதன் மீது மோதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சக்திவேல் மற்றும் அவரது மனைவி படுகாயம் அடைந்தனர். 2 குழந்தைகள் காயமின்றி தப்பினர்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று, காயமடைந்த 2 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆட்டோ மோதியதில் காயமடைந்த மாடும் உயிருக்கு போராடியது. மாட்டின் உரிமையாளர் வந்து அதனை மீட்டுச் சென்றார்.
திருநெல்வேலி பகுதியில் சாலையில் மாடுகள் சுற்றித் திரிவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் அப்துல் ஜப்பார் கூறும்போது, “திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற விபத்துகளால் வாகன ஓட்டிகள் உயிர் பறிபோகும் நிலை உள்ளது.
சாலையில் திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று கோசாலையில் ஒப்படைக்கின்றனர். மாட்டின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி, மாட்டை மீட்டு வந்து, மீண்டும் சாலையில் திரிய விடுகின்றனர். இது தொடர்கதையாக நடக்கிறது. மேலும், மாடுகளும் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதத் தொகையை அதிகரிக்க வேண்டும். சாலையில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இனியும் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவது தொடர்ந்தால் மாடுகளைப் பிடித்து, மாநகராட்சி அலுவலகத்தில் விடும் போராட்டம் நடத்துவோம்” என்றார்.