திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் பவனி: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலை அம்மனுடன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த அண்ணாமலையார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலை அம்மனுடன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த அண்ணாமலையார்.
Updated on
1 min read

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. அண்ணாமலை உச்சியில் கடந்த 19-ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத் தரிசனத்தை 3-வது நாளாக நேற்றும் பக்தர்கள் தரிசித்தனர். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை என கூறப்பட்டு, மாட வீதியில் 10 நாட்கள் நடைபெறக் கூடிய சுவாமி உற்சவம் மற்றும் மகா தேரோட்டம், தெப்பல் உற்சவம், சுவாமியின் கிரிவல பவனி ஆகியவற்றுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதனால், கொடியேற்றத்துக்கு பிறகு கடந்த 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சுவாமி உற்சவங்கள் நடைபெற்றன. மேலும், அய்யங் குளத்தில் நடைபெற வேண்டிய தெப்பல் உற்சவமும், கோயில் உள்ளே இருக்கும் பிரம்மத்தீர்த்தக் குளத்தில் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது. சிறப்பு அலங் காரத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மன், தெப்பலில் பவனி வந்து அருள்பாலித்தார். நாளை இரவு, வள்ளி தெய்வானை சமேத முருகரின் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், சிறப்பு அலங்காரத்தில் நேற்று காலை எழுந்தருளிய உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பவனி வந்து அருள்பாலித்தார். அவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, கோயிலில் திரண்டிருந்த பக்தர் கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என முழங்கி தரிசித்தனர். கரோனா கட்டுப்பாடு காரணமாக, இந்தாண்டும் அண்ணாமலை யாரின் கிரிவலத்துக்கு தடை செய் யப்பட்டுள்ளது.

கார்த்திகைத் தீபத் திருவிழாவை யொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஆன்லைனில் பதிவு செய்திருந்த வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் மற்றும் அனுமதி சீட்டு பெற்றிருந்த உள்ளூர் பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆன்லைன் பதிவு மூலம் சுவாமி தரிசனம் செய்யும் நடைமுறை நாளையுடன் (23-ம் தேதி) முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு, வழக்கமான நடைமுறையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனிடையே பக்தர்களின் கிரிவலம் 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in