

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது புதுச்சேரியில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று மாநிலப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா குறிப்பிட்டார். ஆட்சியமைத்தவுடன் நிறைவேற்றியுள்ள கல்விக் கடன் ரத்து, புதிதாக 10 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை உள்ளிட்டவை அரசின் சாதனைகள் என்றும் குறிப்பிட்டார்.
புதுச்சேரி பாஜகவின் செயற்குழுக் கூட்டம் வில்லியனூரில் மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாநிலப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயற்குழுக் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர்
கரோனாவிலிருந்து இந்திய மக்கள் மட்டுமின்றி உலக மக்களை பாதுகாக்கப் பாடுபட்டதற்கும் தடுப்பூசி தயாரிக்க ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கிய பிரதமர் மோடிக்குப் பாராட்டுகள். நாட்டில் கடைக்கோடியில் உள்ளோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் பாரபட்சமின்றி வழங்கிய மத்திய அரசுக்குப் பாராட்டுகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாஜக மாநிலப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசுகையில், ''புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் குப்பை வரியை வசூலித்ததை நீக்கி மக்களின் துயரத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி நீக்கியுள்ளது. புதிதாக 10 ஆயிரம் பயனாளிகளுக்கு முதியோர், விதவை உதவித்தொகை வழங்கியுள்ளோம். முதியோர், விதவை உதவித்தொகை ரூ.500 உயர்த்தித் தரப்பட்டுள்ளது.
பாப்ஸ்கோ நஷ்டத்தில் இருந்தாலும் தீபாவளியை ஒட்டி புதுச்சேரி மக்களுக்கு சலுகை விலையில் மளிகைப் பொருட்களை சிறப்பு அங்காடி மூலம் தந்துள்ளோம். மழையால் மக்கள் பாதிக்கப்பட்டவுடன் சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணமும், சேதமடைந்த நெற்பயிருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமும் அறிவித்துள்ளோம்.
நீண்டகாலப் பயன்பாட்டுக்கு வராமல் இருந்த புதுச்சேரி மினரல் வாட்டர் திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடனை முற்றிலும் ரத்து செய்துள்ளோம். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிறைவேற்றும்" என்று தெரிவித்துள்ளார்.