

கடன் வாங்கித் தருவதாக பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து பெண்ணை ஏமாற்றிய கேரளா இளைஞர்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு ஈஸ்வர்நகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பகவான் (60). இவரது மனைவி அன்னபூரணி (55). கடன் கிடைக்க ஏற்பாடு செய்து தருவதாக பெங்களூரு பத்திரிகையில் வந்த விளம்பரத்தை அன்னபூரணி பார்த்துள்ளார். அந்த விளம்பரத் தில் இருந்த சரண் என்கிற வினோத் என்பவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, ரூ.50 லட்சம் கடன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதை யடுத்து, அவர் சொன்னபடி கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி சென்னை பரங்கிமலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு அன்னபூரணி வந்துள்ளார். சரண் உட்பட 5 பேர் அன்னபூரணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது ரூ.50 லட்சம் கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய முதலில் தங்களுக்கு ரூ.10 லட்சம் தரவேண்டும் என்று கூறியுள்ளனர். அன்னபூரணியும் சம்மதம் தெரிவித்து, ரூ.10 லட்சத்தை ஏற்பாடு செய்வதற்கு தனது சொந்த ஊரான பெங்களூருக்கு சென்றுள்ளார்.
அதன்பின் 26-ம் தேதி சென்னை வந்த அன்னபூரணி, அந்த நபர்களை சந்தித்து ரூ.10 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், ஒரு பேப்பர் பார்சலை கொடுத்தனர். பார்சலில் ரூ.50 லட் சம் இருக்கிறது. வீட்டுக்கு சென்று பிரித்துப் பார்க்கும்படி தெரிவித்துள்ளனர். அன்ன பூரணியும் பார்சலை பெங்களூரு வீட்டுக்கு எடுத்துச் சென்று பிரித்துப் பார்த்துள்ளார். அதில் பணத்துக்கு பதில் வெற்றுத் தாள்கள் இருந்துள்ளன. அதிர்ச்சி அடைந்த அன்னபூரணி, உடனடியாக சென்னை வந்து புனித தோமையர் மலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட கேரள மாநிலம் கோட்ட யத்தைச் சேர்ந்த சரண் என்கிற வினோத் (25), திருவனந்த புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்கிற அசோக் (35), கேரள மாநிலம் மாம்பள்ளியைச் சேர்ந்த சிபின் என்கிற சித்தார்த் (27), திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரின்ஸ் (26) மற்றும் கோயம்புத்தூர் எட்டிமடையைச் சேர்ந்த ரிப்பின் ஆப்ரகாம் ஆகியோரை தனிப்படை போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13.66 லட்சம், 17 சவரன் தங்க நகை, விலை உயர்ந்த 2 சொகுசு கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதை யடுத்து, போலீஸார் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.