

இரண்டு நாட்களுக்குப் பிறகு புதுச்சேரி விழுப்புரம்-தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தொடங்கியது.
கடும் மழை, வீடூர் அணையில் தண்ணீர் திறப்பால் சங்கராபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆரியபாளையம் பாலத்திற்கு மேலாகத் தண்ணீர் ஓடியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக இவ்வழியே வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. தற்பொழுது நீர்வரத்து குறைந்துள்ளதால் இச்சாலையில் போக்குவரத்துக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் உறுதியைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளனர்.
இப்பகுதி மக்கள் கூறுகையில், "மத்திய, மாநில அரசுகள் பாலத்தை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். பாலம் பழுதடைந்துள்ளதால் புதிய பாலம் கட்ட வேண்டும்" என்று கோருகின்றனர்.