Last Updated : 21 Nov, 2021 04:50 PM

 

Published : 21 Nov 2021 04:50 PM
Last Updated : 21 Nov 2021 04:50 PM

செல்போன், கணினியில் விளையாடிய பொறியியல் பட்டதாரி மன உளைச்சலில் தற்கொலை: விளையாட அனுமதிக்காதீர் என போலீஸார் எச்சரிக்கை

புதுச்சேரி

புதுவையில் தொடர்ந்து கணினி, செல்போனில் விளையாடிய பொறியியல் பட்டதாரி அதீத மன உளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதிக நேரம் தனிமையில் குழந்தைகளை மொபைல் கேம் விளையாட அனுமதிக்காதீர் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

புதுச்சேரி மங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் தீபக். வயது 22. சிவில் இன்ஜினீயர் பட்டதாரி. இவர் கடந்த ஆண்டு கரோனா காலத்துக்குப் பிறகு மிக அதிகமாக கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் விளையாடி வந்துள்ளார். அதன் பிறகு சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டு சீரானது. அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் அவருக்கெனத் தனியாக அறை இருந்தது. அந்த அறையில் கம்ப்யூட்டர், மொபைல் போன், கேம் விளையாடத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்திருந்தார்.

தொடர்ந்து கம்ப்யூட்டர், மொபைல் போனில் விளையாடி வந்த சூழலில் நேற்று இரவு தனது பிரத்யேக அறையில் தீபக் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

இவ்விசாரணை தொடர்பாக போலீஸார் கூறுகையில், "முதல் கட்ட விசாரணையில் கடந்த சில நாட்களாகவே தீபக் அதிக பதற்றத்துடன் இருந்துள்ளார். அத்துடன் அதிக கோபத்துடன் டென்ஷனாக இருப்பதால் யாரும் தன்னிடம் பேசவேண்டாம் என்றும் தெரிவித்தார். அவரது அறையில் கணினி, மொபைல் கேம் விளையாடும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மொபைல் போன், வீடியோ கேம் தொடர்ச்சியாக அதிக நேரம் விளையாடியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் விரக்தியாகி தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரித்து வருகிறோம்

பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை மிக அதிகமாக செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் கேம் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறையின் மூலம் எச்சரிக்கை செய்கின்றோம். மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நீண்ட நேரம் தனிமையில் இருக்க அனுமதிக்க வேண்டாம். மிக அதிக நேரம் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் விளையாடுகின்ற விளையாட்டில் தொடர்ந்து தோற்கும் நிலை ஏற்பட்டாலும் இதுபோன்ற விபரீத முடிவுகளை இளைஞர்களும், சிறுவர்களும் இப்போது எடுத்து வருகிறார்கள் ஆகவே, பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை மிக நீண்ட நேரம் ஆன்லைனில் விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டாம்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x