

மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வர வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மக்கள் நலக் கூட்டணி தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. மக்கள் நலனுக்காக குரல் கொடுக்க உருவாக்கபட்ட இயக்கம். இக்கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகளின் கொள்கையுடன் எங்களுக்கு உடன்பாடில்லை. எங்களைப் போன்று ஊழல் எதிர்ப்புக் கொள்கை கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்கு வர வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல கொள்கை மாற்றமும் தேவைப்படுகிறது.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தவிர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.