

விவசாய சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.
ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திருமாவளவன் சென்னை திரும்பும் வழியில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் விளைவாகவே மோடி அரசு பணிந்துள்ளது. விவசாயிகளின் உரிமையைச் சிதறடிக்க முடியாத நிலையில், 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு உடனடியாக இந்த முடிவை எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு பாஜக உள்ளாகும் எனக் கருதுகிறேன். எங்களது கட்சி எம்.பி.யான ரவிக்குமாரும் நேரடியாக விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றார்.
இப்போராட்டம் முழுக்க கட்சி சார்பற்ற விவசாய சங்கங்களைச் சேர்ந்தது என்ற முறையில் நாங்கள் ஆதரித்தாலும், இந்த வெற்றிக்கு பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளே உரிமையாளர்கள்.
இப்போராட்டத்தில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்த 750 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலா ரூ.3 லட்சம் தருவதாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. இறந்தவர்கள் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
மத்திய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்க வலியுறுத்துகிறோம். விவசாயிகள் மீது பதிவிட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும். லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் விவசாயிகளின் மீது லாரியை ஓட்டி விவசாயிகளைப் படுகொலை செய்தவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். அந்த அமைச்சரின் மகன் நேரடியாகக் குற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு உள்ள நிலையில், அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான வகையிலுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற சட்டங்களை எல்லாம் திரும்பப் பெறவேண்டும்.
தமிழகத்தில் காலி துணைவேந்தர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அதற்கு தலித் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களை முன்னுரிமை அடிப்படையில் நியமிக்க வேண்டும். இவையெல்லாம் மத்திய அரசு செய்ய வேண்டும்''.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.