

காவல் துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது என்று சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டது குறித்து அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் திருடர்களால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''திருச்சி நவல்பட்டு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
ரோந்துப் பணிக்குச் சென்ற பூமிநாதன், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்புக் கருவிகள் எதுவும் கையில் இல்லாமல் நான்கு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் கிடந்து போராடி உயிர்விட்டதாக வரும் செய்திகள் நெஞ்சை கனக்கச் செய்கின்றன.
சமூக விரோத சக்திகளால் காவல்துறை அதிகாரிகள் இப்படிக் கொல்லப்படுவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிடும் என்பது நிரூபணமாகத் தொடங்கியிருக்கிறதோ? காவல் துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.