

அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட தற்போது அம்மா மருந்தகங்கள் கூடுதலாகத் திறக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இந்த நிலையில், இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “அதிமுக ஆட்சியில் இருந்ததை விடக் கடந்த 6 மாதங்களில் அதிக அளவில் அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புள்ளிவிவரங்கள் இல்லாமலே அறிக்கை விடுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகிவிட்டது.
திமுக ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 41 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். நான் முன்னாள் முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கொண்டுவந்த அம்மா மருந்தகங்கள் மூலம் எத்தனை பேர் பயனடைந்துள்ளார்கள் என்ற புள்ளிவிவரத்தை அளிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.