சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Updated on
1 min read

இரவு ரோந்துப் பணியில் திருடர்களால் தாக்கப்பட்டு, வெட்டிக் கொல்லப்பட்ட நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

”திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் 21-11-2021ஆம் தேதி அதிகாலை நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குடி காலனியில் இரவு ரோந்துப் பணியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு திருடர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும்போது துரத்திப் பிடித்துள்ளார்.

இச்சம்பவத்தின்போது அந்த மர்ம நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையின் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பூமிநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர், ரோந்துப் பணியிலிருக்கும்போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன்.

இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதன், சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in