

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகளுக்காக ‘தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021’-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட் டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பெறவும், மாநில அளவில்குழந்தைகளுக்கான கொள்கையை வடிவமைப்பது அவசியமாகும். இதைக் கருத்தில்கொண்டுகுழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகளுக்கான இலக்கினை அடையவும், குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி, மருத்துவம், பாலியல் பாகுபாடின்மை, பாதுகாப்பு இவை அனைத்துக்குமான தனித்துவம் வாய்ந்த கொள்கையாக “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு உதவித் திட்டங்கள், நிவாரண உதவிகளை வழங்க கடந்த மே 29-ம் தேதி பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். இத்திட்டத்தின்கீழ், தற்போது வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த 256 குழந்தைகளுக்கு ரூ.12.80 கோடி மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த 6,493 குழந்தைகளுக்கு ரூ.194.79 கோடி, என மொத்தம் 6,749 குழந்தைகளுக்கு ரூ.207.59 கோடி அரசால் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. நிதி ஆதரவுத் திட்டத்தில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள1,148 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு மாநில அரசின் முழு பங்களிப்புடன் நிதியுதவி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1 கோடியே 37 லட்சத்து76 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, இத்திட்டத்தில் 10 குழந்தைகளுக்கு நிதியுதவிக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதுதவிர, சமூக நல இயக்குநரக கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றி பணிக்காலத்தில் இறந்த 15 பணியாளர்களின் வாரிசுகளுக்கு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குதலின் அடையாளமாக 7 வாரிசுகளுக்கு ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
போக்குவரத்து அலுவலகம்
போக்குவரத்துத் துறை சார்பில்கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.3 கோடியே 57 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய அலுவலக கட்டிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கீதாஜீவன், தலைமைச்செயலர் வெ.இறையன்பு, உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், சமூகநலத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.