

தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கர்நாடகாவின் உள்பகுதி, அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 21-ம் தேதி (இன்று) சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.
அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி, 22-ம் தேதி (நாளை) நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
23, 24-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய் யக்கூடும்.
சென்னையில் அடுத்த 2 நாட் களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.