

அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.எம்.கதிரேசனை நியமித்து ஆளுநர்ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக ஆளுநரும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, ஆர்.எம்.கதிரேசனை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர் பதவியேற்கும் நாளில் இருந்து3 ஆண்டுகள் பணியில் இருப்பார்.
அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற கதிரேசன், இங்கிலாந்தில் ஓராண்டு முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியில், காமன்வெல்த் சார்பில் ஈடுபட்டுள்ளார். 36 ஆண்டுகள் கல்விப் பணியில் அனுபவம் பெற்றஅவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மைய இயக்குநராகவும், பல்கலைக்கழக வேளாண் துறையின்தலைவராகவும் பணியாற்றியவர்.
பரவலான ஆராய்ச்சி அனுபவம் கொண்ட கதிரேசன் இதுவரை 31 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். சர்வதேச நிகழ்வுகளில்30 ஆராய்ச்சிக் கட்டுரைகளைவெளியிட்டதுடன், பல்வேறு சர்வதேச கல்வி, ஆராய்ச்சி நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். 2 புத்தகங்களை எழுதியுள்ள இவர்,29 ஆராய்ச்சிக் கட்டுரைகளைதேசிய அளவிலான கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார்.
இதுதவிர, ரூ.16.11 கோடி மதிப்பிலான 14 ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். 10 முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறியாளராக இருந்துள்ளார்.
2001-ல் பிரிட்டிஷ் பயிர் பாதுகாப்பு கவுன்சில் விருது, 1997-ல்காமன்வெல்த் சீனியர் அகாடமி ஸ்டாஃப் விருது, 2018-ல் ஹரித்புரஸ்கார் விருது பெற்றுள்ளார்.ரோமில் உள்ள உணவு, விவசாயநிறுவன ஆலோசகராவும், தேசிய பல்லுயிர் பரவல் ஆணையத்தின் வல்லுநர் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
பல்கலைக்கழக நிர்வாகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றகதிரேசன், சிங்கப்பூர், சீனா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு கல்வி,ஆராய்ச்சிப் பணிகளுக்காக சென்றுள்ளார்.