

தந்தை ஜீவசமாதி ஆனதாக சொன்ன தாய் மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் மகள் புகார் தெரிவித்துள்ளார்.
பெரும்பாக்கம் கலைஞர் நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ்(60). இவரது மனைவி லட்சுமி (45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் ராஜேஸ்வரன் (30) துபாயில் பணிபுரிகிறார். மகள் தமிழரசி(25) தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவர் தாய், தந்தையுடன் வசித்துவரும் நிலையில் 2 நாட்களாக தந்தையைக் காணவில்லையே என்று தாயிடம் கேட்டுள்ளார். அவர் வெளியே சென்றுள்ளார், வந்து விடுவார் என்று மகளுக்குதாய் பதில் அளித்துள்ளார். நேற்று முன்தினம் (நவ.19-ம் தேதி) மீண்டும் தந்தையை பற்றி தாயிடம் கேட்டாள் மகள்.
அப்போது ஜீவ சமாதி ஆகவேண்டும் என்று தந்தை தன்னிடம் சத்தியம் வாங்கி கொண்டு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறி, கடந்த 17-ம் தேதி வீட்டின் பின்புறம் அவர் தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் படுத்துக் கொண்டு தன்னை மண் போட்டு மூடச் சொன்னார். அவர் சொன்னபடியே தானும் செய்துவிட்டதாக தாய் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மகள் பெரும்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார்.
இதனையடுத்து பெரும்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, இது தொடர்பாக குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வருவாய்த் துறை முன்னிலையில் போலீஸார் நாகராஜின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: நாகராஜன் குறி சொல்வது, சாமி ஆடுவது, பேய் விரட்டுவது போன்ற பணிகளையும் செய்து வந்துள்ளார். தான் ஜீவசமாதி ஆகவேண்டும் என மனைவியிடம் தெரிவித்து அவரே குழியைத் தோண்டிபடுத்துக் கொண்டு மனைவியை மண் கொட்டி மூடச் செய்துள்ளார். அப்பொழுது மனைவியிடம் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என சத்தியம் பெற்றுள்ளதாக தனது வாக்கு மூலத்தில் லட்சுமி தெரிவித்தார். விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.