

தமிழக அரசுடன் இணைந்து இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ)நடத்தும், தகவல் தொடர்புத் துறை குறித்த ‘கனெக்ட் 2021’ சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை வரும் நவம்பர் 26-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இம்மாநாடு, ஒரு நிலையான ஆழமான தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை கருப்பொருளாக கொண்டு நடத்தப்படுகிறது.
மாநாட்டை தொடங்கிவைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனெக்ட்2021 விருதுகளை வழங்கி, தமிழகஅரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்துகிறார். இந்த மாநாடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசும்போது, “தமிழக அரசும்இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து கடந்த 2000-ம் ஆண்டுமுதல் நடத்தும் கனெக்ட் மாநாடு மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக மாறி வருகிறது. இந்தமாநாடு மூலம் தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய முதலீடுகள் தமிழகத்துக்கு வரவேண்டும். 2030-க்குள் தமிழகம் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவில் பொருளாதார உற்பத்தியை அடைவதற்கு இந்தமாநாடு உதவுவதாக அமையவேண்டும்’’ என்றார்.
சிஐஐ தமிழ்நாடு தலைவர் டாக்டர் எஸ். சந்திரகுமார் கூறும்போது, “கடந்த 20 ஆண்டுகளில் கனெக்ட் மாநாடு தொழில்நுட்ப தளங்கள் உருவாக்கம், ஐசிடி அகாடமி, சிறப்பு தொழில்நுட்ப பூங்காக்கள், விண்வெளி தொழில் பூங்காவில் புதிய மேம்பாடுகள், திறன் மேம்பாட்டிற்கான தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு உள்ளிட்டவற்றில் பல்வேறு சாதனை முயற்சிகளை உருவாக்கி உள்ளது’’ என்றார்.
சிஐஐ கனெக்ட் 2021 தலைவர் ஜோஷ் பவுல்கர் பேசும்போது, ‘‘இந்த மாநாடு தற்போது அனைத்துதொழில்நுட்ப வழங்குநர்களையும் தொழில்நுட்ப நுகர்வு தொழில்களையும் இணைத்து, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த சேவைகள் துறையில் சிறப்பு கவனம் செலுத்தும் விதமாக மாறி உள்ளது’’ என்றார்.