

இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின்போது வெடிக்கப்பட்ட நாட்டு வெடியால், 13 வயது சிறுவனின் பார்வை பறிபோனது.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் சந்தோஷ். 13 வயதான இவர், கடந்த 15-ம் தேதி தனது சகோதரி புவனேஷ்வரி வேலை செய்யும்பேன்ஸி ஸ்டோருக்கு சென்றுஉள்ளார். அப்போது, அந்த தெருவில் ஒரு இறுதி ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது. ஊர்வலத்தின்போது, பேன்ஸி ஸ்டோர்வாசலிலேயே நாட்டு வெடியை வைத்துள்ளனர். அது வெடித்தபோது வெடிகுண்டு சிதறல்கள் சிறுவன் சந்தோஷின் இடதுகண்ணில் பட்டது. கண்ணில் இருந்து ரத்தம் கொட்டியதால், கடையின் உரிமையாளரான செல்வி என்பவர் சந்தோஷை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சந்தோஷை பரிசோதனை செய்தமருத்துவர்கள், அவரது இடதுகண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுஉள்ளதாக தெரிவித்துள்ளனர். நரம்புகள் பாதிக்கப்பட்டதால், மாற்றுக் கண் கிடைத்தாலும் பார்வை வராது என்று தெரிவித்துஉள்ளனர்.
இது தொடர்பாக சந்தோஷின் சகோதரி எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸாரின் விசாரணையில், ஜாபர்கான்பேட்டை ஜான் கென்னடி தெருவைச் சேர்ந்த விமலா என்பவரின் இறுதி ஊர்வலத்தின்போது சண்முக வேல் என்பவர் நாட்டு வெடி வெடித்ததும், அந்த வெடியால் சிறுவனின் பார்வை பறிபோனதும் தெரியவந்தது.
இதையடுத்து நாட்டு வெடி வாங்கியதாக ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த குணசேகரன், பட்டாசு வெடித்ததாக சண்முக வேல் மற்றும் சட்டவிரோதமாக நாட்டு வெடி விற்றதாக செல்வகுமார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.